குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் மேத்தா. தொழிலதிபரான இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி ரேஷ்மா இரண்டு மகள்களைக் கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் மற்றும் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மேத்தா, மனைவி ரேஷ்மாவைக் கத்தியால் குத்தியுள்ளார். அதை அவர்களது இளைய மகள் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், மகள் எனப் பார்க்காமல் அவரையும் சுத்தியலால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்.
சிறுமியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசியிருக்கிறார். வெட்டி வீசப்பட்ட சிறுமியின் உடல்களின் சில பகுதிகள் தாத்ரா பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. மகளின் உடல் பாகங்களை தியு டாமன், தாத்ரா நகர் ஹவேலி, சில்வாசா ஆகிய பகுதிகளில் வீசியெறிந்ததாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கொலை ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைய மகளின் சில பாகங்கள் கிடைத்திருக்கும் நிலையில் மற்ற பாகங்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் தேடப்பட்டு வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மனைவியையும், மகளையும் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மேத்தா, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல, மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் தனது லைவ்-இன் பார்ட்னரை கொடூரமாகக் கொலை செய்து, உடலை அப்புறப்படுத்த அதைத் துண்டு துண்டாக வெட்டியதுடன் அதை குக்கரில் வைத்துச் சமைத்த நிகழ்வுகளும் பேசுபொருளானது. இதற்கு முன்பு, கடந்தாண்டு டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஷரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 30+ துண்டுகளாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.