சென்னையில் இளம்பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்ட இளைஞர், போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ”நிஷாந்த் என்பவரும் தானும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பலமுறை என்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். மேலும், என்னிடம் அவ்வபோது பணமும் பெற்று வந்தார். இதுவரை ரூ.68 லட்சம் கொடுத்துள்ளேன். ஆனால், சொன்னபடி திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். நிஷாந்துக்கு சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடக்கவிருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, தொழிலதிபர் மகளுடன் நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இதனால் நிஷாந்த் அதிருப்தியடைந்தார். பின்னர், அவர் தலைமறைவானார். அவரை 4 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், அவரின் நண்பர்களை பிடித்து விசாரித்தனர். அதில் காணாமல் போன அன்று நிஷாந்த் தங்களுடன் மது அருந்திவிட்டு நண்பர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில் நாளை ஏதாவது ஒரு ஏரியில் என் உடல் மிதக்கும் என தெரிவித்துள்ளார்.
அவரது கார் போரூர் ஏரி கரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நிஷாந்த் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியாமல் போலீசார் குழம்பினர். நிஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என தெரியாததால் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஒரு குழுவினர் போரூர் ஏரி முழுவதும் நிஷாந்த் உடலை தேடினர். இந்நிலையில் 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் நிஷாந்த் உடல் இன்று கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.