வரும் மார்ச் 2-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனர்களின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வரும் மார்ச் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து பியூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதி வரும் மார்ச் 2-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.