பப்பாளி பழம் நமது உடலுக்கு மிகவும் நல்லது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பப்பாளி பழத்தில் எத்தனை நன்மை உள்ளதோ, அதே அளவு நன்மை அதன் இலைகளிலும் உள்ளது. ஆம், காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, வயிற்றை சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதே போல், பப்பாளி இலைகளை எடுத்துக்கொண்டாலும் நமது ஆரோக்கியத்திற்கு மியாவும் நல்லது.
அந்த வகையில், பப்பாளி இலைகளை எடுத்துக்கொள்வதால் நமது உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள். முதலில், இந்த பப்பாளி இலையின் சாறை நீங்கள் காலம் முழுவதும் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஆம், இந்த பப்பாளி இலைச் சாற்றை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் குடித்தாலே போதுமானது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, எதுவாக இருந்தாலும் அளவாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது, சருமத்தில் உள்ள கொலாஜன் குறையத் தொடங்குகிறது. இதனால் தான் வயது அதிகமாகும் போது முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, சருமம் தளர்வாக மாறத் தொடங்குகிறது. இதற்காக பலர் பல ஆயிரங்கள், லட்சங்களை செலவு செய்து கொலாஜன் ஊசிகளை போட்டுக்கொள்வது உண்டு. மேலும், கொலாஜன் பொடிகளையும் வாங்கி அருந்துவது உண்டு. இதனால் தான் ஹீரோயின்கள் வயதானாலும் இளமையாக இருக்கின்றனர்.
ஆனால் அனைவராலும் இதுபோன்று பணம் செலவு செய்ய முடியாது. இதனால் அவர்கள் இயற்கையாகவே கொலாஜனை பெற்றுக்கொள்ள சிறந்த வழி பப்பாளி இலை தான். ஆம், பப்பாளி இலைச் சாற்றை வாரத்தில் மூன்று முறை குடித்து வந்தால் போதும். வயதானாலும் முகத்தை இளமையாக வைத்திருக்கலாம். இது சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. செலவே இல்லாமல் நீங்கள் இளமையாக இருக்க இதை விட சிறந்த வழி கிடையாது.
டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆம், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே இரத்தத் தட்டுக்கள் குறைந்து விடும். அவை கணிசமாகக் குறைந்தால், இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பப்பாளி இலைச் சாறு குடிக்கும் போது, இரத்தத் தட்டுக்கள் அதிகரிக்கும். இதன் விளைவாக, உடல் நலத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பப்பாளி இலைச் சாற்றை குடிப்பதால், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், பப்பாளி இலைச் சாற்றை உட்கொள்வது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.