கொரோனாவின் உருமாறிய புதிய வகையான ஜே.என்.1 வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில் அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கொரோனாவின் ஓமைக்ரான் வகை வைரசின் மற்றொரு வகையான ஜே.என். 1 வைரஸ் கடந்த சில மாதங்களாக பரவல் உலகளவில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இது ஐரோப்பிய நாடான டென்மார்க், மேற்காசிய நாடான இஸ்ரேல் ஆகியவற்றில் கடந்த ஜூலை இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்த பரவலால், கடந்த அக்டோபரில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட ஜே.என். 1, நவம்பர் இறுதியில் நம் நாட்டிலும் நுழைந்துள்ளது. கேரளாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகையால், லேசான தொண்டை வலி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகளே தென்பட்டன.
இருப்பினும், புதிய வைரஸ் பரவலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருபவர்கள் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் இந்த ஜே.என். 1 வகை பரவல் அதிகரித்து வருவது தெரிந்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுதும் பரிசோதனை நடவடிக்கைகள் ஒருபுறம் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான பணிகளும் வேகமெடுத்து உள்ளன.
இருப்பினும், ஜே.என். 1 வைரசின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் ஜே.என். 1 வகை வைரசின் பாதிப்பு எண்ணிக்கை சமீபகாலமாக சற்று அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களை விட இங்கு அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், அது அதிகமாக கண்டறியப்படுகிறது. இருப்பினும், மாநிலம் முழுதும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜே.என். 1 வைரசால் யாரும் பீதி அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள சுகாதார அமைச்சகம், விடுமுறை காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.