ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஷியாம் யாதவ், பணி முடிந்து தினமும் சக ஊழியர்களுடன் பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம். அதன்படி, ஐதராபாத்தில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டும், அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதற்கு கொரோனா வைரஸ் நோய் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னரே இதுபோன்ற இளம் வயதினருக்கு எந்தவிதமான முன் அறிகுறி இன்றி மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன் தெலுங்கானாவில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்பட்டது என்னது தெரியவந்தது.அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜிம் பயிற்சி செய்து கொண்டிருந்த தெலுங்கானா மாநில போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் புஷ்ஷப் என்ற உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், தற்போது பேட்மிண்டன் விளையாடி ஷியாம் யாதவ் உயிரிழந்ததை தொடர்ந்து, தெலங்கானாவில், 15 நாட்களில் மட்டும் மாரடைப்பால் உயிரிழந்த ஐந்தாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.