நமது உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களைப் பற்றி ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த வகையான நோய்கள் உடலில் ஏற்பட்டால் ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் ஹையாடல் ஹெர்னியா என்ற இரைப்பை ஏற்றம் நோய். இது குடலிறக்கம் நோய்களில் ஒரு வகை தான்.
அதாவது உணவுக் குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் தசை வளர்ச்சியை குறிப்பது தான் ஹையாடல் ஹெர்னியா. இது சிறிய அளவில் இருக்கும் போது எவ்வித பிரச்சனையையும் உடலில் ஏற்படுத்தாது. ஆனால் இந்த வீக்கம் அல்லது தசை வளர்ச்சியோ பெரிய அளவில் வளர்ந்தால் முதல் அறிகுறியாக நெஞ்செரிச்சல் தான் இருக்கும்.
இவ்வாறு ஏற்படும் ஹையாடல் ஹெர்னியாவை காரமான உணவுகளை சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தடுப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வாக இருக்கும். இப்பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களையும், அறிகுறிகளையும் பார்க்கலாம்?
காரணங்கள்
பெரும்பாலானோருக்கு ஹையாடல் ஹெர்னியா பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இப்பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்து வருகின்றன. பிறப்பிலேயே உணவு குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே இடைவெளி இருப்பது, உடல் பருமன், நாள்பட்ட இருமல், கர்ப்பமாக இருக்கும் போது ஏற்பட்ட அழுத்தம், மலச்சிக்கல் போன்றவை காரணங்களாக இருந்து வருகின்றன.
அறிகுறிகள்
ஹையாடல் ஹெர்னியாவின் முதல் அறிகுறியாக நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது. இதன் பின்பு தொடர்ந்து அதிகப்படியான அமிலம் சுரப்பு, புளிப்பு ஏப்பம், வயிற்று உப்புசம், வீங்கிய வயிறு, வாந்தி போன்றவை அறிகுறிகளாக இருந்து வருகின்றன. முதலில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்திப்பது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.