தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ’’வட தமிழக கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கின்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே பாலச்சந்திரன் வெளியிட்ட தகவலில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இப்போது தென்கிழக்கே சுமார் 420 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழகம் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால், அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.