தமிழகத்தில் நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 17, 18ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 17 செ.மீ, மேல் பவானியில் 10 செ.மீ, நடுவட்டத்தில் 9 செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.