தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.