இயந்திரமயமாகி விட்ட இந்த உலகில் பணத்தைவிட நேர்மைதான் முக்கியம் என வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நெட்டிசன் ஒருவரின் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’– இது வள்ளுவர் வாக்கு. ஆனால், பலருக்கு உதவி கேட்கும்போது இருக்கும் பணிவு, பின்னாளில் மறந்து விடுகிறது. உதவி தேவைப்படும் காலத்தில், உதவி செய்தவரை கடவுளாகவே நினைத்தாலும்கூட, காலங்கள் செல்லச் செல்ல காற்றில் அவர் செய்த உதவியும் மறந்து விடுகிறது. ஆனால், அது எல்லோருக்கும் பொருந்தாது என்பதை நிரூபித்துள்ளார் யார் எவரென்று தெரியாத நபர் ஒருவர். முகம் தெரியாத அந்த நபர்தான் தற்போது சமூகவலைதளங்களில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டு வருகிறார்.
கமல்சிங் என்பவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 15 மாதங்களுக்கு முன், யாரென்று தெரியாத ஒருவரின் தாய்க்கு சிகிச்சைக்காக பண உதவி செய்தேன். தன்னால் முடிந்த உதவியாக ரூ. 201-ஐ அந்த நபருக்கு ஜிபே மூலம் அனுப்பி வைத்தேன். பின்னர், தான் செய்த உதவியையே அவர் மறந்து விட்டார். இந்தச் சூழ்நிலையில்தான், தனது வங்கிக் கணக்கிற்கு ஜிபே மூலமாக ரூ.201 பணம் வந்துள்ளது. யார் பணம் போட்டது என பார்த்தபோது, கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் எந்த எண்ணிற்கு மருத்துவ உதவியாக ரூ.201 அனுப்பினேனோ, அதே எண்ணில் இருந்துதான் தற்போது பணம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது”. காலத்தில் தனக்கு கிடைத்த உதவியை, தன்னால் முடிந்தபோது திருப்பிச் செய்துவிட வேண்டும் என நினைத்த அந்நபரின் நேர்மை கமல்சிங்கை வியக்க வைத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட அந்நபரின் தாய் தற்போது எப்படி இருக்கிறார் என நலம் விசாரித்துள்ளார் கமல்சிங். அதற்கு அந்த நபர், ‘அவர் நன்றாக இருப்பதாகவும், தற்போது தனது தொழிலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அப்போது தனக்கு உதவி செய்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து வருவதாகவும்’ தெரிவித்துள்ளார். அந்த நபருடனான தனது உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார் கமல்நாத். அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது. முகம் தெரியாத அந்நபரின் நேர்மையோடு, ‘நாம் உழைத்து சம்பாதித்த பணம், மற்றவர்களுக்கு உதவுவதால் தீர்ந்து விடாது, மீண்டும் நமக்கே வந்து சேரும்’ என்று கமல்நாத்தின் மனிதநேயத்தையும் நெட்டிசன்கள் பாராட்டத் தவறவில்லை.