பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி , தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். பாரா ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையர் துடுப்புப்படகு போட்டியில் அனிதா, நாராயணன் வெள்ளி வென்றனர். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் டெக் சந்த் வெண்கலம் வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் பி-1 பிரிவில் இந்திய ஆண்கள் அணியினர் தங்கம் வென்றனர். அஸ்வின், டர்பன், சவுந்தர்ய பிரதான் ஆகியோர் கொண்ட ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. செஸ் போட்டியில் தனியாகவும் விளையாடி 3 பதக்கங்களை வென்றனர். பர்பன் இனானி- தங்க பதக்கத்தையும், சவுந்தர்யா பிரதான் – வெள்ளி பதக்கத்தையும், அஸ்வின் மக்வானா வெண்கல பதக்கமும் வென்றனர். செஸ் போட்டியில் பி பிரிவில் இந்திய வீரர் கிஷன் கங்கோலி வெண்கலம் வென்றார்.பி-2 பிரிவில் இந்திய ஆண்கள் அணியினரும் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
ஆடவர் 400 மீட்டர் தடகளத்தில் இந்திய வீரர் திலீப் மஹத் காவித் தங்கம் வென்று அசத்தினார். 49.48 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து திலீப் சாதனை படைத்தார். 1,500 மீ., தடகள போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா வெண்கலம் வென்றார். பி.ஆர்.3 கலப்பு இரட்டையர் படகுப் போட்டியில் அனிதா மற்றும் நாராயண ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதுவரை 29 தங்கம், 31 வெள்ளி, 51வெண்கலம் என 111 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சீனா 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களை கைப்பற்றிய பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.