புதுச்சேரியில் தமிழகத்தை போல பல வளர்ச்சி மற்றும் பெண்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண் குழந்தைகள் பிறந்ததும் அரசு சார்பில் ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும் என்றும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி நகர வளர்ச்சி குழுமம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் சார்பில் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி கடன் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், “ஏழை எளிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தில் உருவாக்கப்பட்டது தான் மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் சாலையோர கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.
இந்த வியாபாரிகள் சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும் வியாபாரம் செய்ய வேண்டும். புதுச்சேரியில் கடந்த முறை 1,567 பேருக்கு தலா ரூ.10000 கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 608 பேர் சரியாக கடனை செலுத்தி, இரண்டாவது முறையாக ரூ.20000 கடனுதவி பெற்றுள்ளனர். வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தியவர் கூடுதலாக கடனுதவி பெறலாம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை அலையவிடாமல் வங்கிகளும் ஒரே சமயத்தில் அனைத்து ஆவணங்களையும் பெற்று கடனை கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத் உள்ளோம். சுமார் 70 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் வகையில், இத்திட்டம் செயல்படவுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் ஆகிய திட்டங்களை விரைவில் செயல்படுத்தபட உள்ளதாக” தெரிவித்துள்ளார்.