விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபம் மற்றும் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவு தூண் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மருது பாண்டியர் குருபூஜை விழாவுக்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணிமண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.