வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் தங்களின் வீடுகளில் ஏசி வாங்கி விட்டனர். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கோடை காலம் என்றாலே, மக்கள் அடிக்கடி தோல் பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. அதிலும் மிக கொடுமையானது என்றால் அது வியர்க்குரு தான்.
வியர்க்குரு வந்துவிட்டாலே, தாங்க முடியாத அளவிற்கு எரிச்சல், அரிப்பு உண்டாகும். இந்த கொடுமையான வேர்க்குரு, கழுத்து, முதுகு, இடுப்பு, மார்பு மற்றும் சில நேரங்களில் முகம் போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். அதிகப்படியான வியர்வை சேரும் போது, இந்த வியர்க்குரு உருவாகிறது. ஒரு சிலர், இதை குணமாக்குவதாக நினைத்து பூஞ்சை எதிர்ப்பி, ஆண்டிசெப்டிக் பவுடர்களை பயன்படுத்துவது உண்டு.
ஆனால் இது போன்ற பவுடர்களை பயன்படுத்தும் போது, பிரச்சனை இன்னும் அதிகமாகத்தான் செய்யும். ஏனென்றால், நாம் வியர்வையை வெளியேற விடாமல், பவுடர் போட்டு அடைத்து விடுகிறோம். இதனால், முடிந்த வரை இந்த வியர்க்குருவை குணப்படுத்த வீட்டு வைத்தியம் தான் சிறந்தது. இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.
அந்த வகையில், வியர்க்குருவை குணப்படுத்த கற்றாழை ஜெல் சிறந்தது. இதற்கு, கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு இருக்கும் இடத்தில்
தடவி 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் குளிர்ச்சியாக இருப்பது மட்டும் இல்லாமல், விரைவில் வியர்க்குரு குணமாகும். இதை நீங்கள் இரவு தூங்கும் முன் இதை தடவி, காலையில் குளிர்ந்த நீரிலும் கழுவலாம். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதற்கு பதில் நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுதலாம். இதற்கு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் கலந்து, அந்த பேஸ்ட்டை வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவுங்கள். இதனால், எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும். அதுமட்டுமின்றி, இது பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் தோல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
செலவு இல்லாமல் வியர்க்குருவை குணப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், 5-6 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் போட்டு வியர்க்குரு இருக்கும் இடத்தில் வைக்கலாம். இதனால் எரியும் உணர்வு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் ஆகியவை மட்டும் இல்லாமல் வியர்க்குருவும் விரைவில் குறைந்து விடும்.
இதற்கு பதில், ஒரு கைபிடி வேப்ப இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அந்த நீரை ஆறவைத்து, வியர்க்குரு இருக்கும் இடத்தை சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வியர்க்குரு இருக்கும் இடத்தில சந்தனத்தை தடவினாலும் வியர்க்குரு குறையும்.