Stalin: மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருச்சி இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக தொகுதி பங்கீடு செய்து முடித்து விட்டார். அதன் பின்னர் மார்ச் 20ம் தேதி தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார். அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
Readmore: Lok Sabha Elections: 57 வேட்பாளர்களின் 3வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!