ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் கார்த்தி (வயது 27). இவரது உறவுக்கார பெண்ணான மீனாதேவி (28) என்பவர் அதே பகுதியில் தனது 6 வயது மகளுடன் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மீனாதேவி தன்னுடைய கணவரை பிரிந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கும், மீனாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, வேறு ஒரு பெண்ணை கார்த்தி காதலித்ததாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்ததாகவும் மீனாதேவிக்கு தொியவந்தது.
இதனால் கார்த்தி மீது மீனாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவத்தன்று மீனாதேவியின் வீட்டுக்கு காா்த்தி சென்றுள்ளார். அப்போது இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மீனாதேவி, வீட்டில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது ஊற்றினார். கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டதும் அவர் வலியால் அலறித்துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மீனாதேவியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.