fbpx

”குற்றம் செய்யமாட்டார் என்று எப்படி நம்புவது”..? செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடிக்கு நீதிபதி சொன்ன காரணங்கள்..!!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சனையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது செப்டம்பர் 20ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், ”ஜூன் 14இல் கைதானபோது ஜாமீன் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனு, ஜூன் 16இல் இதே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நீதிமன்றம் கருதுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் பிரிவு 45 படி, கைது செய்யப்பட்டவர் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தால், முதலில் அமலாக்கத்துறை தரப்பு வாதத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 2-வதாக கைது செய்யப்பட்டவர் குற்றம் புரியவில்லை என்பதையும் ஜாமீனில் வெளியே வந்தால் மீண்டும் குற்றம் புரிய மாட்டார் என்பதையும் நீதிமன்றம் ஏற்க வேண்டும்.

ஆனால், வழக்கு விசாரணையின் போது தான் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என்பதை நிரூபிக்கவில்லை. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக அரசின் தற்போதைய அமைச்சராகவும் உள்ளார். ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் போன்ற முக்கிய துறைகளை வகித்துள்ளார்.

செல்வாக்கு மிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்கவோ, ஆவணங்களை திருத்தவோ வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. மனுதாரருக்கு எதிராக உள்ள ஆதாரங்கள் மற்றும் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரர் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றோ அல்லது ஜாமீனில் விடுவிக்கப்படும் போது, அவர் எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றோ நம்புவதற்கு, நீதிமன்றம் போதிய காரணங்களை கண்டறியவில்லை. எனவே, தகுதி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி அல்லி அதிரடியாக உத்தரவிட்டார்.

Chella

Next Post

தூள்..! தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்.‌‌..! ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம்...!

Thu Sep 21 , 2023
தமிழக அரசு சார்பில் விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி. நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ட்ரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2023-24-ஆம் நிதி ஆண்டில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் […]

You May Like