ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்னும் ஓரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.