நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒருவாரம் அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் அவர்களின் காயங்கள் மற்றும் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்ற நிலைமையை பொறுத்து அமைகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகத்தின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17,000ஐ கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் உலகம் முழுவதிலும் இருந்து பேரிடர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு விரைந்துள்ளன. இந்த பேரழிவிற்குப் பிறகு, முதல் 24 மணி நேரத்தில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பது கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள், சுவாசிக்க நீர் மற்றும் காற்று முக்கிய காரணிகளாக உள்ளது.
சிரியா மற்றும் துருக்கியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை 5 முதல் 7 நாட்களுக்குள் உயிருடன் மீட்க வாய்ப்புள்ளதாக மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அவசர மற்றும் பேரிடர் மருந்து நிபுணர் டாக்டர் ஜரோன் லீ கூறியுள்ளார். பலத்தக் காயமடைந்தவர் மற்றும் மூட்டு துண்டிக்கப்பட்டவர்களை ஒருமணி நேரத்திற்குள் மீட்கவில்லையென்றால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு மிக குறைவு என்று கூறிய வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் மருத்துவப் பள்ளியின் அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் ஜார்ஜ் சியாம்பாஸ், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களில் வயதானவர்கள் மற்றும், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களின் உடல்நிலையும் மோசமாக வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ள இளைஞர்களுக்கு காற்று மற்றும் நீர் போன்ற தேவையானவற்றை வழங்குவதற்கு பேரிடர் மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாக சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர் கோல்வெல் கூறினார்.
2011ம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில், இடிபாடுகளில் சிக்கி ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஒரு இளைஞனும் அவரது 80 வயது பாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு, போர்ட்-ஆவ்-பிரின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த 16 வயது சிறுமி 15 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய சியாம்பாஸ், இடிபாடுகளில் சிக்கியவர்கள், அருகில் உயிரிழந்தவர்களை பார்க்கும் பொழுது அவர்களின் மனநிலையே, உயிரிழப்புக்கு காரணமாகவும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.