ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாக்லான் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள போல்-இ-கோம்ரியில் உள்ள தக்கியகானா இமாம் ஜமாத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாக்லானின் தகவல் மற்றும் கலாச்சாரத் துறையின் இயக்குனர் முஸ்தபா ஹஷேமி கூறியதாவது; குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழப்பு குறித்து முழுமையான விவரம் இன்னும் வரவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல்வேறு நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
சமீப காலமாக ஆப்கானிஸ்தானை உலுக்கிய மற்றொரு குண்டுவெடிப்பு இதுவாகும். 2021 இல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு கொடுமைகளை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது அதில் ஏராளமான ஒரு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.