ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 300 இந்தியர்களுடன் சென்ற விமானம் அவசர அவரமாக பிரான்சில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 300+ இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா என்ற நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆள் கடத்தல் சம்பவம் நடந்ததாகச் சந்தேகத்தின் பேரில் தரையிறக்கிய பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் இந்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். 303 இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவாவிற்கு புறப்பட்ட சார்ட்டர் சிறப்பு விமானத்தில் ஆட் கடத்தல் நடப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், பிரான்ஸ் விமானத்தைத் தரையிறக்கியது. லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் சில காரணங்களுக்காக அது தரையிறங்கியது.
அப்போது விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்பட்டவர்கள் என்று பிரான்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இப்போது இரண்டு பேரைக் கைது செய்த பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த இந்தியா தூதரகம் அனுமதி அளித்ததாகவும் அதன் பின்னரே பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தில் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அதிகாரிகளும் அங்கே விரைந்துள்ளனர்.
இது குறித்து இந்தியத் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “துபாயில் இருந்து நிகரகுவாவிற்கு சென்ற 303 பேர் கொண்ட விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். தூதரகக் குழு எங்களிடம் அனுமதியைக் கோரியிருந்தனர். நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமை” என்று பதிவிட்டுள்ளனர்.
இரவு முழுக்க அந்த 303 இந்தியர்கள் விமான நிலையத்தில் தங்க வேண்டி இருந்தது. அவர்கள் மீண்டும் கிளம்ப எப்போது அனுமதிக்கப்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. பிரான்ஸ் விதிகளின்படி சந்தேகத்தின்படி ஒரு வெளிநாட்டுக் குடிமகனை நான்கு நாட்கள் வரை அந்நாட்டு போலீசாரால் காவலில் வைக்க முடியும். நீதிபதி ஒப்புதலுடன் மேலும் அதை 8 நாட்கள் நீட்டிக்க முடியும். அதன் பிறகும் நீதிபதி முன் ஆஜர் செய்து இதை நீட்டிக்க முடியும். இப்படி அதிகபட்சமாக 26 நாட்கள் ஒருவரைத் தடுத்து நிறுத்தி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.