அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த சூறாவளி புயல் வீசியது.. இதனால் இடியுடன் கூடிய பலத்த கனமழையும் பெய்தது… இந்த சூறாவளி புயல் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்தன.. பேரழிவை ஏற்படுத்திய இந்த சூறாவளி புயல் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அவசரகால மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.. இந்நிலையில் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மிசிசிப்பி முழுவதிலும் உள்ள படங்கள் இதயத்தை உடைப்பதாக உள்ளன. நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
மிசிசிப்பி கவர்னர் டேட் ரீவ்ஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ ஒரே இரவில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி குறித்து அதிபர் ஜோ பிடனுடன் பேசினேன்.. அவசர மேலாண்மை நிறுவனமான, FEMA தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர் எங்களுக்கு உறுதியளித்தார். கவர்னர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டாட்சி நிர்வாகி மிகப்பெரிய உதவிகளை வழங்கி வருகின்றன..” என்று குறிப்பிட்டுள்ளார்..
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரோலிங் ஃபோர்க் நகரத்தில், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.. மின்கம்பங்கள் அறுந்து விழுந்ததால் பல இடங்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்ந்து சேதமடைந்திருப்பது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.. அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் சூறாவளி ஏற்படுவது பொதுவான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது..