Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2021ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. எனது கணவர் மணிகண்டன் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். அந்த தொழிலை மேம்படுத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12.50 லட்சம் கடனாக வாங்கினார். இதற்காக மாதம் ரூ.28,293 வீதம் தவணைத்தொகை தவறாமல் செலுத்தி வருகிறார். கடந்த ஜனவரி 5ம் தேதி தவணைத்தொகையை செலுத்தவில்லை. அதற்காக அந்நிறுவனத்தில் அவகாசம் கேட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்கு அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சிவபாலன், தமிழ் இலக்கியன் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் என்னிடம் கடன் தொகையை கேட்டு செல்போனை அடித்து உடைத்ததுடன் என்னை திட்டி அடித்து கீழே தள்ளினர். எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் கருவுற்றிருந்தேன். அவர்கள் என்னை தாக்கி கீழே தள்ளியதில் கரு கலைந்துவிட்டது. இதற்காக நான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினேன். இதுகுறித்து பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், அந்நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே அவர்களை, போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி சரவணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.