பத்திரிகையாளர்கள் மற்றும் பயில்வான் ரங்கநாதனுடன் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படமும், நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட சில படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் மே 9ஆம் தேதி தமிழ் சினிமாவில் 9 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவுள்ளன. அந்த வகையில், இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என் காதலே’ திரைப்படமும் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘என் காதலே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த படத்தில் நடித்த ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் திவாகருக்கும், சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்கள் நடிகர்களாக மாறி சினிமாவையே கெடுத்து வருவதாக நடிகை வடிவுக்கரசி மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் பேசியிருந்த நிலையில், ”தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இந்த படத்தில் நடிச்சிருக்கேன் என பேசத் தொடங்கிய திவாகர், படத்தைப் பற்றி பேசாமல் மிஷ்கின் பற்றி விமர்சிக்க தொடங்கினார். இதனால், குறிக்கிட்ட பயில்வான் ரங்கநாதன் திவாகரை கேள்வி எழுப்ப, இது பெரும் பஞ்சாயத்தாக வெடிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் இருந்து வந்தவர்களுக்கு நடிக்க தெரியாது என மிஷ்கின் எப்படி சொல்லலாம் என திவாகர் பேசிய நிலையில், படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் என பயில்வான் ரங்கநாதன் சொல்ல, அதை எப்படி நீங்க சொல்லலாம். நான் பேசிட்டு இருக்கும் போது குறுக்கே வராதீங்க என திவாகர் சொல்கிறார். உங்களோட சொந்த பிரச்சனைகளை பேச பிரஸ்மீட் வைக்கல என பயில்வான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், பயில்வானுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் சிலர் குரல் கொடுத்த நிலையில், நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, நான் தான் பெரிய ஆள்.. என்கிட்ட தேவையில்லாமல் பேசக் கூடாது என சொல்லிவிட்டு தன்னோட சிக்னேச்சர் ஸ்டெப் போடுறேன் என வாட்டர்மெலானை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே பயில்வானை பார்த்து கையசைத்து விலக சொன்னதும் பத்திரிகையாளர்கள் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் திவாகரை அமைதியாக இருக்கச் சொல்லி அங்கிருந்து வெளியேற்றினர்.