டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி மொகமத் ஷெரீப் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் ஊழியர்களிடம் தன்னை அபுதாபி மன்னர் குடும்பத்து பணியாளர் என்றும் மன்னருக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்திருப்பதாக கூறி அபுதாபி குடியிருப்பு சான்று உட்பட சில ஆவணங்களையும் காட்டியுள்ளார். தான் சொல்லும் கதையை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக அடிக்கடி தான் அபுதாபியில் எப்படியெல்லாம் வாழ்ந்து வருகிறேன் என்பது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அந்த நட்சத்திர ஹோட்டலில் அவர் மொத்தம் 4 மாதங்கள் தங்கியிருந்துள்ளார். ஆரம்பத்தில் சிறிது பணம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அபுதாபியில் இருந்து பணம் வந்ததும் கொடுப்பதாக தெரிவித்தார்.
அவர் தங்கியது மற்றும் சாப்பாட்டு செலவு என மொத்தம் ரூ.35 லட்சத்துக்கு பில் வந்துள்ளது. இதில், ரூ.11.5 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு அந்த நபர் திடீரென தப்பிச் சென்றுவிட்டார். ரூ.23.5 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து, போலீஸார் மொகமத் ஷெரீப் கொடுத்த ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். அவை போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. தப்பிசெல்லும் போது ரூ.20 லட்சத்திற்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அதுவும் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. அதோடு ஹோட்டல் அறையில் இருந்த வெள்ளிப்பாத்திரங்கள் உட்பட அனைத்தையும் திருடிச் சென்றுள்ளார். அவரின் புகைப்படத்தை கண்காணிப்பு கேமரா மூலம் எடுத்து போலீஸார் தேடி வருகின்றனர்.