டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. ஆனால் மோடி 1978-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.. எனவே 1978, 1983-ம் ஆண்டு குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் குறித்த தகவல்களை குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது..
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் ஆகியவை குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க தேவையில்லை என்றும், தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டது.. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது..
இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமராவ் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான் புனே பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். மேலும் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன். இரண்டு சான்றிதழ்களையும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.. இதன் மூலம் பிரதமர் மோடியை அவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..