குஜராத் அணிக்கு எதிரான எங்களது த்ரில் வெற்றியை எங்க தல கேப்டன் தோனிக்கு அர்பணிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களும், சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. இதன்பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அதிகரித்தனர். இருப்பினும் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா சிக்ஸ் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றிவாகை சூடித்தந்தார். இதன்மூலம் 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் வெற்றி குறித்து ஜடேஜா பேசுகையில், “எனது சொந்த மண்ணில், இவ்வளவு ரசிகர்களுக்கு முன்பாக சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. போட்டி குஜராத்தில் நடைபெற்றாலும், சென்னை அணிக்கு ஆதரவு கொடுப்பதற்காக இங்கு அதிகமான ரசிகர்கள் வந்துள்ளனர், அவர்களின் ஆதரவும் மிகப்பெரியது. மழை நிற்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளுக்கு மேலாக அவர்கள் காத்திருந்தனர்.
எங்களது இந்த வெற்றியை, எங்கள் அணியின் மிக முக்கியமானவரான தோனிக்கு அர்பணிக்க விரும்புகிறோம். என்ன ஆனாலும் பராவாயில்லை முடிந்தவரை அடிப்போம் என்ற திட்டத்தோடு தான் கடைசி இரண்டு பந்துகளையும் எதிர்கொண்டேன். மோஹித் சர்மா எந்த திசையில் பந்துவீசுவார் என்ற கணிப்பு எனக்குள் இருந்தது, அதற்கு ஏற்றார்போல் ஷாட் அடிக்க வேண்டும் என்ற நினைத்தேன், நான் நினைத்து வைத்திருந்தது கடைசி நேரத்தில் தவறாக கூட முடிந்திருக்கலாம், ஆனால் வெற்றி எங்களுக்கு கிடைத்துவிட்டது.மோஹித் சர்மா நிச்சயம் slow பந்தை தான் வீசுவார் என்பதால் என்னால் முடிந்த வரை முழு பலத்துடன் அடிக்க வேண்டும் என்பதே எனது ஒரே திட்டம். சென்னை அணியின் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.