தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக பயோ மெட்ரிக் வருகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் தாமதமாக வருகை தருவதும், எவ்வித அனுமதியும் பெறாமல், முன்கூட்டியே பல்கலை.யில் இருந்து கிளம்புவதாகவும் பரவலாக புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகளால் பல்கலை வளாகத்தில் பல்வேறு விரும்பத்தகாத செயல்பாடுகள் நிகழ்கின்றன. வெளிநபர்கள் வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடு இல்லாத காரணங்களால் மாணவர்கள் போராட்டம், ஆசிரியர் – மாணவர்களிடையே சுமூக உறவு பாதிக்கிறது.
எனவே, இதனை தவிர்க்க பல்கலைகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது, பணி முடிந்து வெளியேறும் போதும் வருகைப் பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.