இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அத்துடன் இந்த உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளுக்கு பிறகு பேசிய சாம் கரன், ”இந்த விருது எனக்கானது என்று நான் நினைக்கவில்லை. இந்த விருதுக்கு பென் ஸ்டோக்ஸ்தான் முழுமையாக தகுதியானவர். அவருக்குத்தான் இந்து விருது கிடைத்திருக்க வேண்டும். மைதானத்தின் அமைப்புக்கு ஏற்ப பந்துகளை வீச வேண்டும் என்று நினைத்தேன். அது எனக்கு எடுபட்டது. பாகிஸ்தான் பவுலர்கள் அருமையாக பந்துவீசினர். அவர்கள் சுற்றி வளைத்து எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறந்த வீரர். அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தான் எப்படிப்பட்ட வீரர் என்பதை ஒவ்வொரு முறையும் அவர் நிரூபித்து வருகிறார். எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். உலக சாம்பியனாக இருப்பது மிகுந்த பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

முன்னதாக, இந்த வெற்றி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், பந்துவீச்சாளர்களே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என பாராட்டினார்.