”நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்பது தொடர்பாக முடிவு எடுத்துவிட்டேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அகிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். மூன்றாவது நாளான இன்று ராகுல் காந்தியுடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஏஞ்சலின் ஷரோனா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது ராகுல் காந்தியிடம், தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென யாத்திரை செல்வது முரண்பாடாக இருப்பதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கட்சியின் தேர்தல் வரும்போதுதான் நான் தலைவர் ஆவேனா இல்லையா என்பது தெரிய வரும். அதே சமயம், நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டுமோ அது தொடர்பாக முடிவு எடுத்துவிட்டேன். அதில் எந்த குழப்பமும் இல்லை. எனவே, தேர்தல் வரும் வரை பொறுத்திருங்கள். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு. கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன். காங்கிரஸ் கட்சியிலும் சரி, நடைபயணத்திலும் சரி எந்த முரண்பாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களுக்கு என்னைவிட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.