சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..
பின்னர் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்றார்.. செண்டரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பேட்டரி காரில் பயணித்தனர். இதை தொடர்ந்து 4.20 மணியளவில் சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்..
இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.. அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.. பிரதமர் மோடிக்கு விவேகானந்தர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.. தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த ஆண்டுவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி “ தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன்.. ராமகிருஷ்ண மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.. தமிழகத்தில் கதாநாயகனாக வரவேற்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர்.. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கு ராமகிருஷ்ண மடம் வழிகாட்டுகிறது.. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார்..
அனைவருக்கும் சமமான வாய்ப்பளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேற்றம் அடைய முடியும்.. பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார்.. அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது.. தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியாவிற்கான காலம் இது..” என்று தெரிவித்தார்..