Zelensky; உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அரிய கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையின்றி வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். இதுதொடர்பாகப் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வருகை தந்த ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உக்ரைனில் ஆண்கள் இல்லை எனத் தெரிவித்ததால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அதிபர் டிரம்ப் குறுக்கிட்டு, அதிபர் ஜெலென்ஸ்கியைப் பார்த்து, “அமெரிக்கா என்ன உணரப் போகிறது என்று கட்டளையிடும் நிலையில் நீங்கள் இல்லை” எனக் கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டார். “மூன்றாம் உலகப் போருடன் சூதாட்டம்” செய்வதாகவும் ஜெலென்ஸ்கியை டிரம்ப் நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
தங்களின் முன்னாள் அதிபர் ஜோ பைடனை முட்டாள் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் இல்லையென்றால் இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும் என்றும் காரசாரமாகக் கூறினார். அமெரிக்கா செய்துவரும் உதவிகளுக்காக நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால், ஜெலென்ஸ்கி அதிருப்தியுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன.
இந்தநிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கி உள்ளன. இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது, நமது சுதந்திரத்திற்கு மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அமைதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக கைக்கோர்த்துள்ளன. இது நீண்ட காலமாக இல்லாத ஒன்று. உக்ரைனுக்கு அமைதிக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் நிலைமைகள் குறித்து எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்.
முக்கியமான கூட்டங்கள் மற்றும் முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறோம். அமைதியைக் கொண்டு வருவதில் எங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கூட்டு முயற்சி நமது எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Readmore: பெற்றோர்களே உஷார்!. சாக்லெட் சாப்பிட்டு மயங்கி விழுந்த 4வயது சிறுவன்!. பரிசோதனையில் வெளியான பகீர்!.