காதலன் வெறுத்து பேசியதால், வேதனையடைந்த கல்லூரி மாணவி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் திருமணமாகி, கணவருடன் வசித்து வருகிறார். 23 வயதாகும் இளைய மகள் சரண்யா, தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சரண்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அருண், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம், பணி நிமித்தமாக அருண் குஜராத்தில் உள்ளார்.
வெகுதூரத்தில் இருந்தாலும் செல்போன் மூலம் இருவரும் பேசி வந்தனர். இந்த நிலையில், சமீப நாட்களாக சரண்யாவிடம் திடீரென கோபம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அருண். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து, அதனை குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்பு எலி பேஸ்ட் கலந்த குளிர்பானத்தை குடித்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து, தனது காதலன் அருணுக்கு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ‘‘சாரி மாமா. நான் உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன். நான் உன் லைஃப்ல கண்டிப்பாக திரும்ப வரமாட்டேன். அவ்வளவுதான். போய் சேர்ந்துடுவேன். இனிமேல் நீ சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். என் அம்மாவை மட்டும் பார்த்துக்கொள்.
உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை புரிஞ்சிக்காமல் உன்பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கிற. நான் சாகிறேன். பாவம் என் அக்கா. எனக்காக எவ்வளவோ பண்ணா. ஆனால், இன்றைக்கு உன்னாலதான் சாகுறேன். லவ் யூ மாமா, பாய்..’’ என்று முடிகிறது அந்தக் காணொளி. இதுபற்றி நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரண்யாவின் தற்கொலைக்குக் காரணமான அவரது காதலனிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.