சென்னை பெரம்பூர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி (18). இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், தாய் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர், தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகுமாரி கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியைச் சேர்ந்த விக்கி (22) என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவி, விக்கியுடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்கி இருவரும் நெருங்கி பழகிய போது எடுத்த புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த கல்லூரி மாணவி கிருஷ்ணகுமாரி, வீட்டில் இருந்த பினாயிலை குடித்துவிட்டு கடந்த 2ஆம் தேதி வீட்டின் இரண்டாது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியிடம் அல்லிக்குளம் 11-வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி நேரில் சென்று மரண வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கிருஷ்ணகுமாரி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.