சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களுக்கான ICC தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டி தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்று இருக்கிறது
மேலும் ICC தரவரிசையிலும் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இன்று ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் டெஸ்ட் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 என மூன்று வித ஃபார்மட்டுகளிலும் முதலிடத்திற்கு முன்னேறி இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது.
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி இங்கிலாந்து அணி இடம் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற பிறகு முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தர வரிசையில் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2023 ஆம் வருட உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்தியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது. மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் 1-1 என்று சமணில் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி இடம் ஆன 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இந்திய அணி இருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மீதம் உள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் மீண்டும் முதலிடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதே போல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 121 புள்ளிகளுடனும் டி20 தரவரிசை பட்டியலில் 266 புள்ளிகளுடனும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.