தென்காசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரோடுஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசியதாவது, “ “ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்வார். பா.ஜ.க. நாம் பாரத தேசத்தின், நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பணி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியா கூட்டணியினர் அவர்களின் குடும்ப அரசியலை மட்டும் கணக்கில் கொண்டு ஆட்சி செய்யதுடிக்கின்றனர். பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு இந்தியா சொல்வதை உலக நாடுகள் கேட்காது. இன்று பாரதம் என்ன சொல்கிறதோ அதை உலக நாடுகள் கேட்கின்றன. இதுதான் பிரதமர் மோடி அரசுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான வித்தியாசம் என்றார்.
மேலும், ”உலக பொருளாதார பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இன்று 5-வது இடத்திற்கு வந்துள்ளது. மீண்டும் 2024-ல் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் போது உலக அளவில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும். அதற்கு ஜான் பாண்டியன் வெற்றிபெற்று லோக்சபாவுக்கு வரவேண்டும். அவரை வெற்றி பெற செய்தால் நன்றி சொல்வதற்காக மீண்டும் உங்களை பார்க்க வருவேன்” என்றார்.