பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே நரிஓடை பகுதியைச் சேர்ந்தவர் அல்லித்துறை மகன் அஜித் (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்தவர் ரஜினி (45) இவருக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ள நிலையில், இந்த தகவல் அஜித்திற்கும் தெரிந்துள்ளது. தனது கள்ளக்காதல் தொடர்பாக குடியிருப்பு பகுதிகளில் தகவல் பரப்பியவர் அஜித் என்று நினைத்த, ரஜினி, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பகுதிக்கு அஜித் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ரஜினி தன்னிடமிருந்த உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித், சுருண்டு விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த ரஜினி, துப்பாக்கியுடன் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜித்தை காப்பாற்ற, 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அஜித்தை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய மங்களமேடு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜித்தின் தாயார் ராதா (60) கொடுத்த புகாரின் பேரில், உரிமை பெறாத கள்ளத்துப்பாக்கி ரஜினிக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும், தப்பியோடிய அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்தும், தனிப்படை அமைத்து தீவிர தேடி வருகின்றனர்.