எந்த அணிக்கு எதிராக ஆடினாலும், குறிக்கோள் வெற்றி பெறுவதுதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு (மார்ச் 23) சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிக்கான போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தனர். இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. போட்டியின் முடிவில் 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணி வென்றது. சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா 65, கேப்டன் ருதுராஜ் 53 ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் “The MSD Experience” என்ற நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ். தோனி, ”இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேன் என்பது தெரியாது. சென்னை சேப்பாக்கம் என்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் மைதானம். ரசிகர்கள் விசில் சத்தத்துடன் என்னை ஆதரிக்கிறார்கள். இதற்குப் பிறகு வேறு மைதானங்களை தேர்வு செய்வது கடினம். மும்பை அணி மீது எனக்கு தனி மதிப்பு உண்டு. 2007ஆம் ஆண்டில் நாம் T20 உலகக் கோப்பையை வென்றபோது, இங்கு வந்தோம். மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியும் மும்பையில்தான் நடந்தது.
அதேசமயம், பெங்களூரு ரசிகர்களும் மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்துகின்றனர். கொல்கத்தாவில் மிகப்பெரிய மைதானம் இருப்பதால், அங்கு ரசிகர்கள் ஒரு அலாதியான உணர்வை தருகிறார்கள். ஒவ்வொரு நகரமும் தனித்துவமான பாராட்டுகளை எனக்கு வழங்குகிறது. எனவே, எனக்கு பிடித்த ஒரு மைதானத்தை மட்டும் தேர்வு செய்வது கடினம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பேட்டிங்கிற்கு களமிறங்கும்போது, ஸ்கோர்போர்டை கவனிப்பேன். அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்வேன். வெற்றிக்கு சில பந்துகள் மட்டுமே இருந்தால், பெரிய அடிகள் விளையாடுவது மட்டுமே என் குறிக்கோளாக இருக்கும். நான் அடிக்க வேண்டியது “சிக்ஸ்” தான். ஒரு பவுண்டரிக்குப் பதில் ஒரு சிக்ஸ் அடித்தால் அந்த இரண்டு ரன்கள் கூட பலமானதாக இருக்கும்.
அதேபோல, பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவது, ‘4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6-வது பந்து “டாட்” பாலாக இருக்க வேண்டும். அது தான் நமக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்பேன். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. தனது அணிக்கு எதிராக மும்பை அணியோடு விளையாடுவது தனக்கு எந்த விதத்திலும் முக்கியமில்லை.
ஒரு பேட்ஸ்மேனாக, நான் எந்த அணிக்கும் எதிராகவும் சிறப்பாக விளையாட விரும்புவேன். எந்த அணிக்கு எதிராக ஆடினாலும், குறிக்கோள் வெற்றி பெறுவதுதான். ஆனால், ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் ஒரு ‘டெர்பி’ போல மாறிவிடுகிறது. அவர்கள் இதைப் பற்றி அதிகம் பேச விரும்புகின்றனர். புள்ளி விவரங்களைப் பார்க்க விரும்புகின்றனர். இது IPL-க்கு நல்லதே” என்று தெரிவித்துள்ளார்.