திரைத்துறையில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் பாத்திமா சனா ஷேக் (Fatima Sana Shaikh). குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அமிர்கானின் தங்கல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தங்கல், லுடோ, அஜீப் தாஸ்தான்ஸ், தக் தக் மற்றும் பல படங்களில் அவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய திரைப்படத் துறையிலிருந்து அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை பாத்திமா பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காஸ்டிங் ஏஜென்ட் ஒருவர் என்னிடம், ‘நீ எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருப்பாய், இல்லையா?’ என்று கேட்டார். நான் கடினமாக உழைப்பேன் என்றும், அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையானதைச் செய்வேன் என்றும் சொன்னேன். ஆனால், அவர் அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால், அவர் எவ்வளவு தாழ்ந்தவராக மாற முடியும் என்பதைப் பார்க்க விரும்பியனேன். அமைதியாகவே இருந்தேன்” என்றார்.
இதையடுத்து, ஹைதராபாத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார், “நாங்கள் ஒரு அறையில் இருந்தோம். தயாரிப்பாளர்கள் அதைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசுவார்கள். நீங்கள் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அதை நேரடியாக நம்மிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், எல்லோரும் அப்படி கிடையாது” என்றார்.
மேலும், தெலுங்கு படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், இதற்காக படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தபோது, அவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் பாத்திமா கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து தான் வெளியேறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.