நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிற விவரங்கள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி யாரும் அவ்வளவாக யோசித்திருக்க மாட்டார்கள். அதாவது ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம். அந்தவகையில், ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்து அமையும். ஒரு ரயில் இத்தனை கிலோ மீட்டர்தான் லிட்டருக்கு கொடுக்கும் என்று, உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதன் மைலேஜ் பாதை, எந்த வகையான பயணிகள் ரயில் – எக்ஸ்பிரஸ், அதிவிரைவு, பயணிகள் மற்றும் அதில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான். ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 24-25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கிமீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயில்களை விட சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துகின்றன என்ற தகவல் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கி.மீ.-க்கும் 5-6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் ரயில்கள் ஏறக்குறைய அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டியதுதான் இதற்கான காரணமாகும். 12 பெட்டிகளை இழுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 கிமீ தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசல் செலவழிக்கிறது. அந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும், பேசஞ்சர் ரயில்கள் 180-200 மீட்டர் வரையிலும் தோராயமாக செல்லாம்.