அண்ணாமலை போன்றவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற டூப் போலீஸ் கிடையாது. காவல்துறையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. அண்ணாமலை போன்றவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு.
அரசியலில் நாகரீகத்தை துறந்து சாலையில் கச்சேரி பாடுபவர்கள் போல் பேசி வருகிறார். அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை. தேர்தலில் வைப்பு நிதியை தக்க வைத்துக் கொள்ள போராடும் ஒரு கட்சியை பார்த்து நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும். இந்த மிரட்டல்களுக்கு அச்சப்பட்டு வீட்டில் அமரும் இயக்கம் திமுக கிடையாது. முதல்வரின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
முடிந்தால் அவரை நாள் குறித்து வர சொல்லுங்கள். அந்தப் போராட்டத்தை சம்பாளிப்பது எப்படி என்று திமுக தொண்டர்களுக்கு தெரியும். தமிழ்நாடு அரசின் மீது சாயம் பூச முயற்சிக்கின்றனர். அந்த நாடகம் எடுபடாது. தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்” என தெரிவித்துள்ளார்.