Court: சொத்தை பரிசாக வழங்கிய பின்னர் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க தவறினால், அவர்கள் வழங்கிய சொத்து பரிசு அல்லது தீர்வு பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் தனது மகன் கேசவனுக்கு ஆதரவாக ஒரு செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அவரும் அவரது மருமகளும் தனது வாழ்நாள் முழுவதும் தன்னை கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் நாகலட்சுமியை கவனித்துக் கொள்ளத் தவறிவிட்டார். மேலும், அவரது மகன் இறந்த பிறகு அவரது மருமகளும் நாகலட்சுமியை புறக்கணித்ததாக கூறி நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ.வை அணுகி மனு அளித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி (RDO), அந்தத் தாய் தனது மகனை அன்புடனும், அவரது எதிர்காலத்திற்காகவும் கொடைச்சீட்டில் கையெழுத்திட்டதாக தெரிவித்ததையும் நாகலட்சுமி வழங்கிய வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு, சொத்து வழங்கல் உடன்படிக்கையை (Settlement Deed) ரத்து செய்ய தீர்மானித்தார். இதை எதிர்த்து மாலா மனு தாக்கல் செய்தார், ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், சமீபத்தில் நாகலட்சுமி இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007-ன் 23(1)வது பிரிவு வயதான பெற்றோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. இந்தச் சட்டம் பெற்றோர்கள் தங்களின் சொத்தை கொடையாகவோ அல்லது கொடைச்சீட்டு (Settlement Deed) மூலமாகவோ மாற்றினால், அதை பெறுபவர்கள் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பாதுகாக்கிறது.
இதன் மூலம், பெற்றோர்களை தவிர்க்கப்பட்டோ, பராமரிக்கப்படாமலோ விட்டால், அவர்கள் அந்த சொத்துப் பரிமாற்றத்தை ரத்து செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெறுபவர் (Transferee) தன் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், வயதானவர்கள் திரும்பப்பெறுதல் கோருவதற்கும், கொடைச்சீட்டை செல்லாததாக அறிவிக்க உரிமை உண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களிடமிருந்து, குறிப்பாக அவர்களின் குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு சொத்து பரிமாற்றங்கள் பெரும்பாலும் அன்பு மற்றும் பாசத்தால் தூண்டப்படுகின்றன என்பதை சட்டம் அங்கீகரிக்கிறது என்பதை நீதிபதிகள் எடுத்துரைத்தனர்.
இந்த வழக்கில், மூத்த குடிமகன் தனது புகாரிலும், ஆர்.டி.ஓ முன்பும், தனது மகனாலும், மருமகளாலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டதாக திட்டவட்டமாக உறுதியாகியுள்ளதாக கூறிய நிதிபதிகள், மாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.