ரயில் டிக்கெட் முன்பதிவு தோல்வியடைந்தாலும் கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் பணம் திரும்ப எப்போது வரும் என்ற சந்தேகம் பயணிகளிடையே உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், பணம் எப்போது வரும் என்ற சந்தேகம் எழும். இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் ரயில் டிக்கெட், பயணத்திற்கான அட்டவணை உருவாக்கப்பட்டவுடன் தானாகவே ரத்து செய்யப்படும். அவர்களுக்கான ஆட்டோ ரீபண்ட் உடனடியாகத் தொடங்கி, மறுநாள் வங்கியில் பணம் திருப்பி அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் உறுதி ஆகாமல், பணம் டெபிட் செய்யப்பட்டால், அடுத்த நாளே பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையைத் தொடங்கும். முழுத் தொகையும் பேமெண்ட் கேட்வே அல்லது வங்கிக்கு திருப்பித் தரப்படும். ஆனால் ரெயில்வே பயணிகளின் கணக்கில் பணத்தை திரும்ப செலுத்துவதற்கு சிறிது நேரம் ஆகும். மேலும் நெட்பேங்கிங், வாலட், கேஷ் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டால், பணத்தைத் திரும்பப்பெற 3-4 வேலை நாட்கள் ஆகும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பணத்தைத் திரும்பப் பெற 6-7 வேலை நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ரத்து கட்டணம் விதிக்கப்படும். அதன் விவரம், ரயில் புறப்படுவதற்கு 48 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் – 25 சதவீத ரத்து கட்டணமும், 12 மணி முதல் 4 மணி நேரம் வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் – 50 சதவீத ரத்து கட்டணமும் விதிக்கப்படும். மேலும் ரயில் ரத்து அல்லது இருக்கைகள் கிடைக்காத காரணத்தால் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்பப் பெறப்படும்.