உணவு நச்சுத்தன்மை என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த பிரச்சனை வரலாம். நாம் உண்ணும் உணவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் மாசுபடுத்தும் போது இது நிகழ்கிறது.
உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று உணவை சரியாக கழுவுவதாகும். சில உணவுகள் குறிப்பாக நன்றாகக் கழுவப்படாவிட்டால் நோய்க்கிருமிகளைக் கொண்டிருக்கும். சரியாகக் கழுவாவிட்டால் உணவு நச்சுத்தன்மையை உண்டாக்கும் சில காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
கீரைகள் : கீரைகள், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் சத்தானவை தான்.. ஆனால் ஈ கோலி, சால்மோனெல்லா. லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் அதில் இருக்கலாம். கீரைகளுடன் தொடர்புடைய நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தீங்கு விளைவிக்கும் ஈ கோலி அல்லது சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாக்டீரியாக்கள் மண், நீர் அல்லது முறையற்ற கையாளுதல் மூலம் கீரைகளை மாசுபடுத்தும். எனவே கீரையை நன்றாக கழுவிய பின்னரே சமைக்க வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் : ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரிகள் மற்றும் தக்காளி போன்ற உண்ணக்கூடிய தோல் கொண்ட பழங்கள், காய்கறிகளின் மேற்பரப்பில் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. நன்றாக கழுவாமல் இந்த காய்கறி அல்லது பழங்களை வெட்டும்போது அல்லது உரிக்கும்போது இந்த பாக்டீரியாக்கள் அவற்றின் சதைப்பகுதிக்குள் செல்லலாம். எனவே மேற்கூறிய காய்கறி, பழங்களை நன்றாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
பெர்ரி வகைகள் : ஸ்ட்ராபெர்ரிகள், கூஸ்பெர்ரி, ராஸ்பெர்ரிகள் உள்ளிட்ட பெர்ரிகளில் பூச்சிக்கொல்லிகள், அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பழங்களை நன்றாக கழுவி, உலர வைப்பது அசுத்தங்களை அகற்ற உதவும். அதே போல் பெர்ரிகளை ஊறவைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை தண்ணீரை உறிஞ்சி மென்மையாக மாறும்.
வேர் காய்கறிகள் : உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் முள்ளங்கி போன்ற வேர் காய்கறிகள் மண்ணில் வளரும். இதனால் அவற்றில் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் அதிகளவு இருக்கும். நன்றாக தண்ணீரில் கழுவிய பின்னரே இந்த வேர் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அதே போல் பரங்கிக்காய், பூசணிக்காய், தர்பூசணி போன்ற கடினமான தோல் கொண்ட பழங்களிலும் அதிகளவு பாக்டீரியார் இருக்கலாம். இந்த பழங்களை வெட்டும்போது, மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்கள் சதைக்கு மாற்றப்படும். இந்த பழங்களை நன்றாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
Read More : நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழணுமா? அப்ப தினமும் காலையில் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..