அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் நாடு வளராது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “நமது நாட்டில் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதில், 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். நாடு முழுவதுமே அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையை நாம் அறிவோம். சில பள்ளிகளைத் தவிர பிற அரசுப் பள்ளிகள் பரிதாபமாக உள்ளன. நம்முடைய நாடு தலைசிறந்த நாடாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வளர்ச்சி அடைந்த நாடாகவும் மாற வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால், நம்முடைய 66% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தரம் குறைந்த கல்வியை பெற்று வரும் சூழலில், நம் நாடு எப்படி வளரும்? அரசுப் பள்ளிகளில் தலைசிறந்த கல்வியைத் தரும் வரையில், வல்லரசு நாடாக மாறும் நம்முடைய கனவு, கனவாக மட்டுமே இருக்கும். நனவாக மாறாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் நாடு வளராது. பெண் கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதுமே புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.’’ இவ்வாறு அவர் பேசினார்.