நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது..
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்ற செய்தியின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் அவ்வாறு கண்டறிந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் 31க்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்..
ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது..
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய உத்தரவை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்..10 நாளில் அமல்படுத்தாவிட்டால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகும்படி, உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மட்டுமின்றி ஊதியம் பெற அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாததால் அதிகாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்..