ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலையை இன்னும் சில வாரங்களுக்கு தொடரவுள்ளதாக அறிவித்து உள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஓலா துவங்கியுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கிலான புக்கிங் எஸ்1 ஏர்-க்கு கிடைத்துள்ளன. எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்துவரும் வரவேற்புக்கு முக்கிய காரணமாக அதன் சலுகை விலையினை சொல்லலாம்.
ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.09 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை குறிப்பிட்ட காலத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எனவும், மற்றவர்களுக்கு ரூ.10,000 அதிகமாக ரூ.1.19 லட்சம் எனவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. இதனால் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை வாங்கிவிட வேண்டும் என பலர் திட்டமிட்டு முடியாமல் போன நிலையில், அத்தகையவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரூ.1.09 லட்ச சலுகையை அனைவருக்கும் திறக்குமாறு பலர் எங்களிடம் கேட்கிறார்கள். ஜூலை 30 இரவு 8 மணி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 12 மணி வரை அனைவருக்கும் சலுகையை நீட்டித்துள்ளோம். அதிகப்படியான டிமாண்ட் உள்ளது, விரைவான டெலிவிரிக்கு சீக்கிரம் வாங்கவும்! என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கு புதியதாக நியான் பச்சை நிற பெயிண்ட் தேர்வை ஓலா வழங்கியுள்ளது. அத்துடன், பிராக்டிக்கல் கிராப் ரெயிலும் ஸ்கூட்டரின் இறுதி முனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.