சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் சின்ன வெங்காயம், முதல் ரகம் கடந்த வாரம் 60 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 80 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம், சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக 60 ரூபாய் அதிகரித்து 120 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது நாளாக சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல் பெரிய வெங்காயம் 10 ரூபாய் அதிகரித்து மொத்த விற்பனையில் 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வரத்து குறைவின் காரணமாகவும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் விலையேற்றம் தொடரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெளி சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.