சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவருக்கு வெற்றி துரைசாமி என்ற மகன் உள்ளார். சினிமா தயாரிப்பாளரான வெற்றி துரைசாமி, படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த 4ஆம் தேதி மதியம் வாடகை கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெற்றி துரைசாமி மற்றும் அவரது உதவியாளர் கோபிநாத் ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் கஷாங் நாலா மலைப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்கு மலை மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு சட்லஜ் நதியில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார் ஓட்டுநர் தஞ்சின் உடலை சடலமாக மீட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உதவியாளரான கோபிநாத் என்பவரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக படகு மூலமாக தேடி வந்த நிலையில், இதுவரை மாயமான வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக இமாச்சலப் பிரதேச போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி வரும் நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டு மீண்டும் நாளை காலையில் தொடரும் என கின்னனூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போன வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இமாசலப் பிரதேச ஆட்சியர் மூலம் இது குறித்து வாய்மொழி உத்தர வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவும் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக வெற்றி துரைசாமியை தேடும் பணியில் துணை ராணுவப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.